Saturday 21 February 2015

சுயம்

என்னை யாரெனக்  கண்டு கொள்ள விழையும் உங்கள் ப்ரயத்தனங்களைக் கண்டு வியந்தபடி இருக்கிறேன். 
என் பார்வைகளைப்பற்றியபடி என் மனத்துள் புகுந்து கொள்வதற்கான
ஆயத்தங்களைக் கண்டும் காணாதபடி  இருக்கிறேன்.
நடுச்சாமத்தில் என் விரல் ஒற்றும் வரிகளில் நீங்கள் என்னைக் கண்டடைய முயலுகையில்
குழல் விளக்கினொளியில் 
அயர்ந்துறங்குகின்றேன். 
உங்கள் மனதிலாடும் என் பிம்பத்தை 
கால் வலிக்க நடை பயின்று
வெளியேற்ற முயல்கிறீர்கள்.
இவ்வரிகளுக்கப்பாலும் துலங்கும் சுயத்தை மறைத்தபடி சிரிக்கத்துவங்குகிறேன்

Thursday 26 September 2013

கோபம்

இதுதானென்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாமல்
மனசின் உள்ளே ஒரு கோபப்பந்து உருண்டு கொண்டிருக்கிறது
தொண்டையடைக்க.

சின்னச் சின்ன துணுக்குகளாய்ச் சேர்ந்து கனத்துச்
சுமக்க வலுவற்ற உருவு எடுத்திருக்கிறது
வேண்டும் நேரம் விரும்பும் உருவெடுக்கும் வலிமையோடிருக்கும்
அதனை போகுமிடமெல்லாம் மறைத்து மறைத்து சுமந்து திரிகிறேன்.

பாம்பாய் உருமாறி கழுத்தைச் சுற்றி 
இறுக்கிக் கொள்ளும் சில நேரம்.
அதன் அனல் நாவு நஞ்சு கோர்த்து 
யார் மீது பல் பதிக்குமோவென்ற 
அச்சத்தோடே கடந்து போகிறேன் எல்லோரையும்.

வீதியில் அலையும் பைத்தியப் பிச்சைக்காரன்
நின்று முறைத்துப் பார்க்கிறான். இவனா பலி…?
அச்சம் படர்கிறது. நல்லவேளை
உள்ளிருந்து பரவிய அனல் துளைக்க மௌனமாய் நகர்ந்து போனான்.
மனசின் உள்ளே கிளர்ந்து 
தோள்மீது வளர்ந்து எய்யப்படாத அம்பாய் 
இலக்கற்று அம்பராத்தூணியில் கனத்துக் கொண்டிருக்கும் 
கோபத்தை என்ன செய்வது?

தப்பித்தவறி எப்போதோ சில முறை சிதறிய கோபம் நினைவில்
வடித்த திராவக வடுக்கள் நிவர்த்திக்க இயலாது
இன்னமும் ரணமாய் என்னுள்ளேயே

கோபம் கரைக்க என்ன வழி?
ஆராய்ந்தால் குறையுமென்று அறிவுரை வந்தது.
மனசுக் குட்டையில் சிறு சலனம்.
கேள்விகள் குமிழ்களாய் விடைகளற்று மறைகின்றன.

இது எப்போது நெஞ்சில் பதிந்தது?
பசியென்று பாலுக்கழுதபோதேவா?
தாய்மை காக்க தன்னைத்தானே விலை பேசிக்கொண்ட குரூரக் கதைகளின் வழி ஊன்றப்பட்டதா?
நெருப்புக் கிரையான தோழியின் நெஞ்சில் நிறைந்திருந்ததன் எச்சமா?
ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணீர்த்துளிகளை உறிஞ்சி முளைவிட்டதா?
எளியார்முன் வலியார் எகிறிக்குதிக்க ஆற்ற இயலாது வேடிக்கை பார்த்த நிர்ப்பந்தத்தில் பெருகியதா?
ஒவ்வொரு வன்முறையும் தேடிப்பிடித்து பகிரப்பட, ஏற்க இயலாமல் தானே அவதியுற்றதாய் வருந்தி அழுது மீளும்போதில் செறிவூட்டப்பட்டதா?
பேருந்தின் நெரிசலில் அத்து மீறுகிற ஆணை சிகை பிடித்திழுத்து கம்பியில் மோதிக்
கொல்லவியலா இயலாமையில் மொட்டு வெடித்ததா?

ஏற்கனவே கொன்றாகிவிட்டது பல முறை
கோபத்தை!

சிறிது சிறிதாக புன்னகையிலும், கவிதையிலும் மழைத்தூறலிலும்
அவ்வப்போது நண்பர்கள் ஆற்றிவைத்த நெருப்பை மீண்டும்
ஏற்றி வைக்கின்றன சில சம்பவங்கள்.

அண்டை அயலானின் நண்பனின் எதிரியின் துரோகத்தில்
மீண்டும் கிளர்ந்தெழுந்து கொதித்துக் கிடக்கிறது
எரிமலைக் குழம்பென 
காத்திருக்கிறேன். தணிக்க இயலாமல்
என் கோபத்தை 
குளிரென நீரென உறைபனியென

மாற்றிவிடும் மற்றுமோர் புன்னகைக்காக….!